இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, February 18, 2012

தேவை அதிகரிப்பு: மும்முரமடைந்துள்ள செங்கல் தயாரிப்புப் பணி

திருத்தணி, : கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல் தயாரிப்புப் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

திருத்தணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான காசிநாதபுரம், வேலஞ்சேரி, முருகம்பட்டு, டி.வி.புரம் மேல் முருகம்பட்டு, கனகம்மாசத்திரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊர்களில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. வீடு கட்டுவதற்குத் தேவையான பொருள்களில் செங்கல் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

செங்கல் தயாரிப்பு மூலப்பொருள்கள் விலை ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு யூனிட் செம்மண் ரூ.650 முதல் 750 வரை விற்கப்பட்டது. தற்போது மூன்று யூனிட் செம்மண் ரூ. 3,500 முதல் 4,500 வரை விற்கப்படுகிறது.


இதேபோல் மணல் விலையும் கிடுகிடுவென உயர்ந்து விட்டது. மூலப்பொருட்கள் விலை உயர்வால் செங்கல் உற்பத்தியாளர்கள் ஒருபுறம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், செங்கல் தேவை அதிகரிப்பால் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. பொதுவாகவே செங்கல் தயாரிப்புக்கு வெயில் காலம் உகந்ததாக இருக்கும். தற்போது பிப்ரவரி மாதமே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தற்போது செங்கல் உற்பத்தி பணி மும்முரம் அடைந்துள்ளது.

இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளர் ரமேஷ் கூறும்போது, செங்கல் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் பல மடங்கு உயர்ந்து விட்டது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்த போதும் செங்கல் தேவை அதிகரிப்பால் உற்பத்தி செய்கிறோம்.  ஆயிரம் செங்கல் தயார் செய்தால் தொழிலாளிக்கு ரூ.300 கூலி தருகிறோம். மழைக் காலம் என்றால் செங்கல் தயாரிக்க முடியாமல் இருக்கும். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம்தான் உற்பத்தியை அதிகரித்தோம்.

ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதம் முதலே வெயில் அடிக்கத் தொடங்கி விட்டதால், செங்கல் உற்பத்தியும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக உற்பத்தி சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது. திருத்தணி நகர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் ஆங்காங்கே கட்டடங்கள் கட்டப்படுவதால் செங்கல் தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்கிறது என்று அவர் கூறினர்.

இதுகுறித்து செங்கல் தயாரிக்கும் தொழிலாளி துரைக்கண்ணு கூறும்போது, ""தினசரி ஆயிரம் செங்கல் தயார் செய்தால் ரூ.300 ரூபாய் கூலி தருகின்றனர். மழைக்காலம் என்றால் மட்டுமே எங்கள் பிழைப்புக்கு பாதிப்பு வரும். வெயில் காலம் என்றால் தொடர்ந்து வேலை இருக்கும்.

தற்போது பிப்ரவரி மாதம் முதலே நல்ல வெயில் அடிப்பதால் நான்கு நாள்கள் காய வைக்க வேண்டிய செங்கல் 2 நாள்களில் காய்ந்து விடுகிறது. இதனால் தொடர்ச்சியாக வேலை இருக்கிறது'' என்று கூறினார்.
விரைவில் தொடரும்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites